விழுப்புரம் மாவட்டத்தில் 512 துணை வாக்குச்சாவடிகள் அமைக்க ஏற்பாடு கலெக்டர் அண்ணாதுரை தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் 512 துணை வாக்குச்சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி விழுப்புரம் மாவட்டத்தில் துணை வாக்குச்சாவடி பட்டியல்களை முடிவு செய்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக வாக்குச்சாவடிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை இரண்டாக பிரித்து துணை வாக்குச்சாவடிகள் அமைக்கவும், பழுதடைந்த வாக்குச்சாவடிகளை மாற்றி அமைக்கவும், வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் ஏதும் இருந்தால் பெயர் மாற்றம் செய்யவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
512 துணை வாக்குச்சாவடிகள்
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பிரித்து துணை வாக்குச்சாவடிகள் அமைக்க தாசில்தார்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிந்து உரிய கள ஆய்வு செய்யப்பட்டு தாசில்தார்களால் சட்டமன்ற தொகுதி அளவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் தாசில்தார்கள் கள ஆய்வு செய்து ஆயிரம் வாக்காளர்கள் மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து 512 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கவும், 66 பழுதடைந்த வாக்குச்சாவடிகளை மாற்றி அமைக்கவும், 8 வாக்குச்சாவடிகளை பெயர் மாற்றம் செய்யவும் தெரிவித்துள்ளனர். இதன்படி வாக்குச்சாவடி இறுதிப்பட்டியல் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன், தி.மு.க. மாவட்ட செயலாளர் புகழேந்தி, பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் சுகுமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ், தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story