சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.2½ கோடி போதை பவுடர் சிக்கியது


சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.2½ கோடி போதை பவுடர் சிக்கியது
x
தினத்தந்தி 6 Feb 2021 2:41 AM IST (Updated: 6 Feb 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு தேங்காய் துருவல் கருவிக்குள் மறைத்து கடத்த முயன்ற ரூ.2½ கோடி மதிப்புள்ள போதை பவுடரை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கக முனையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் சரக்கு விமானத்தில் பெரும் அளவில் போதை மருந்துகள் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் சரக்குகளை ஆய்வு செய்தனர்.

அப்போது தேங்காய் துருவல் கருவிகள், எலக்ட்ரிக் அரிசி குக்கர் போன்ற சமையல் பொருட்கள் இருப்பதாக ஒரு பார்சலில் எழுதப்பட்டு இருந்தது. அதன் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள், அந்த பார்சலை பிரித்து சோதனை செய்தனர்.

அப்போது 4 தேங்காய் துருவல் கருவிக்குள் 3 அட்டை பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதை பிரித்து பார்த்தபோது வெள்ளை நிற பவுடர்கள் கொண்ட 12 பாலித்தீன் பைகள் இருந்தன. இந்த பவுடரை சோதனை செய்தபோது அவை ‘சூடோபீட்ரின்’ என்ற போதை பவுடர் என தெரியவந்தது.

ரூ.2 கோடியே 45 லட்சம் மதிப்புள்ள 24 கிலோ 500 கிராம் எடைகொண்ட போதை பவுடரை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த போதை பொருள் கொண்ட பார்சலை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிய ஏற்றுமதி நிறுவனத்தை சேர்ந்த விவேகானந்தன் (43) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் போதை பொருள் கொண்ட பார்சல்களை அனுப்பியது யார்? என விசாரித்து வருகின்றனர்.

Next Story