தாம்பரத்தில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்து தொழிலாளி சாவு - ஒப்பந்ததாரர் உள்பட 4 பேர் கைது
தாம்பரத்தில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக ஒப்பந்ததாரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. கிழக்கு தாம்பரத்தில் நகராட்சி நிர்வாகமும், மேற்கு தாம்பரத்தில் சென்னை குடிநீர் வாரியமும் பணி செய்து வருகின்றன.
மேற்கு தாம்பரம், பர்மா காலனியில் நேற்று காலை பாதாள சாக்கடை பணிகளுக்காக ஜே.சி.பி. எந்திரம் மூலம் 15 அடி ஆழ பள்ளம் தோண்டி அதில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணியில் 8 ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
ஊழியர்கள் பள்ளத்தில் இறங்கி பணியில் ஈடுபட்டு இருந்தபோது, அதன் அருகில் இரும்பு குழாயை ஜே.சி.பி. எந்திரம் கொண்டு பூமியில் அடித்ததால் கடும் அதிர்வலைகள் ஏற்பட்டு திடீரென மண் சரிந்து விழுந்தது.
இதில் பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளத்தில் நின்றிருந்த திருவொற்றியூரைச் சேர்ந்த சேகர் (வயது 28), மரக்காணத்தை சேர்ந்த பாரதி (21) ஆகியோர் மண் சரிவில் சிக்கி கொண்டனர். இதுபற்றி தகவலறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு படையினர் இரண்டு வாகனங்களில் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அரைமணிநேர போராட்டத்திற்கு பின் மண் சரிவில் சிக்கிய இருவரும் மீட்கப்பட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பபட்டனர்.
ஆனால் அவர்களில் சேகர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பாரதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பள்ளம் தோண்டும் பணியின்போது தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தலைகவசம் உள்பட பாதுகாப்பு உபகரணங்கள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தால் வழங்கப்படவில்லை என்பதும், இதை ஆய்வு நடவடிக்கை எடுக்க வேண்டிய சென்னை குடிநீர் வாரிய உதவி என்ஜினீயர் இப்பணிகளை முறையாக கண்காணிக்கவில்லை என்பதும் தெரிந்தது.
இந்த அலட்சியத்தால் தொழிலாளி உயிரிழந்ததாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் வாசுதேவரெட்டி (56), மேற்பார்வையாளர் சுனந்தகுமார் (26), பல்லாவரத்தை சேர்ந்த துணை ஒப்பந்ததாரர் டில்லிராஜா (40), ஜே.சி.பி டிரைவர் வினோத் (20) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story