மீஞ்சூர் அருகே, அரசு நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை


மீஞ்சூர் அருகே, அரசு நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 6 Feb 2021 4:46 AM IST (Updated: 6 Feb 2021 4:46 AM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் அருகே அரசு நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீஞ்சூர்,

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் அமுதா நகர் உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தமிழக அரசின் பொது வினியோக திட்டத்தின் மூலம் உணவுப்பொருட்களை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று வாங்கி வந்தனர். இந்த நிலையில் அருகில் வருவாய்த்துறைக்கு சொந்தமான அரசு நிலத்தில் ரேஷன் கடை கட்ட ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இடம் தேர்வு பணி முடிந்துள்ள நிலையில் தனியார் ஒருவர் அந்த அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்

இதற்கு அமுதா நகர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று 200-க்கும் மேற்பட்டோர் அங்கு ஒன்று கூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வருவாய் ஆய்வாளர்கள் கந்தன், கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இது குறித்து பொன்னேரி தாசில்தார் மணிகண்டனிடம் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு காலனியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எங்கள் பகுதியில் உள்ள பஞ்சமி நிலம் தனியார் சிலரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. அவர்களிடம் இருந்து மேற்கண்ட தவறான நில மாற்றத்தை ரத்து செய்து நிலத்தை மீட்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மனுவை பெற்று கொண்ட தாசில்தார் அலுவலகத்தினர், இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதனையடுத்து முற்றுகையிட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story