ஏரிகள் நிரம்பும் நிலையில் இருப்பதால் கிருஷ்ணா நதிநீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தம் - பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் நிரம்பும் நிலையில் இருப்பதால் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நீரை தற்காலிகமாக நிறுத்தி கொள்ள கேட்டு கொண்டதற்கு இணங்க தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.
ஊத்துக்கோட்டை,
சென்னை மாநகர பகுதியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தமிழக அரசும், ஆந்திர மாநில அரசும் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி ஆண்டு தோறும் 2 தவணைகளில் ஆந்திர மாநில அரசு கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையில் உள்ள பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து வருகிறது. ஒப்பந்தம் போடப்பட்ட ஆண்டில் இருந்து தற்போது ஏதாவது ஒரு காரணத்தால் 12 டி.எம்.சி. தண்ணீர் முழுமையாக வழங்கப்படவில்லை.
தற்போது கண்டலேறு அணையில் போதுமான தண்ணீர் இருப்பு இருப்பதால் ஆந்திர மாநில அரசு தண்ணீர் திறந்து விட்டு வந்தது. ஆனால் அதனை சேமிக்க முடியாதபடி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஆந்திர மாநில அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடியும், சோழவரம் ஏரியில் 881, புழல் ஏரியில் 3 ஆயிரத்து 243, கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் 494 மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரத்து 490 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி (11.75 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகளில் தற்போது 11 ஆயிரத்து 339 மில்லியன் கன அடி (11.33 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது.
இந்தநிலையில் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு 7 டி.எம்.சி. மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டு முதல் தவணையாக நிமிடத்திற்கு 700 கன அடி வீதம் தண்ணீர் வழங்கி வந்தது. ஆனால் தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பும் நிலையை எட்டி உள்ளதால் தற்போது தண்ணீர் வழங்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் கடந்த 3-ந்தேதி முதல் ஆந்திர மாநிலம் தமிழகத்திற்கு திறக்கும் தண்ணீரை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. இந்த ஆண்டுக்கு வழங்கப்படும் 2-வது தவணையின் போது தேவைப்படும் தண்ணீரை ஆந்திர மாநில அரசு திறந்துவிட வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் தற்போது 56 டி.எம்.சி. இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story