விருதுநகர் மெயின் பஜார் வழியாக பஸ் போக்குவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டம்
விருதுநகர் மெயின் பஜார் வழியாக பஸ் போக்குவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டம்
விருதுநகர் மெயின் பஜாரில் இருபுறமும் கடைகள் உள்ளன. இந்நிலையில் மெயின் பஜார் வழியாக சமீப காலமாக பயணிகள் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பஜார் பகுதி நெரிசலாக காணப்படுகிறது.
மேலும் பொது மக்களுக்கும் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகளுக்கும் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் பஸ் போக்குவரத்தை மாற்று வழியில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் பல கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அறிவுறுத்தல்
இந்த நிலையில் கலெக்டர் தலைமையில் நடந்த மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் இப்பிரச்சினை குறித்து விவாதித்த போது கலெக்டர் மெயின் பஜார் வழியாக பஸ் சென்று வரும் நிலையில் விபத்துகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் இந்த ஏற்பாடு கிராம மக்களுக்கு வசதியாக உள்ளது என்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் போலீசாரும் தெரிவித்துள்ள நிலையில் மெயின் பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்பு உள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்து பின்பு இதுகுறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து மெயின் பஜார் வழியாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கடைகள் அடைப்பு
இந்நிலையில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்த நிலையில் வியாபாரிகளையும் பொதுமக்களையும் தரக்குறைவாக பேசியதாக வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நேற்று கடைகளை அடைத்தது உடன் வியாபாரிகள் சங்க தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சென்று புகார் மனு கொடுத்தனர்.
அதில் பொதுமக்களையும், போலீஸ் வியாபாரிகளையும் தரக்குறைவாக பேசிய போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மெயின் பஜார் வழியாக பஸ்கள் இயக்கப்படுவது தவிர்க்கப்பட ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் இதன் அடிப்படையில் பஸ்களை மாற்று வழியில் இயக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்தனர்
தர்ணா போராட்டம்
இதனைத்தொடர்ந்து மெயின் பஜாரில் பஸ்கள் இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மெயின் பஜார் வழியாக பஸ்கள்இயக்கப்படுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை கோரி நகராட்சி அலுவலகம் சென்று மனு கொடுத்தனர். வியாபாரிகள் போராட்டத்தால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினை குறித்து மெயின் பஜார் வியாபாரிகளுடன் கலந்தாய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
Related Tags :
Next Story