தூய்மை பணியாளரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


தூய்மை பணியாளரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2021 6:16 AM IST (Updated: 6 Feb 2021 6:20 AM IST)
t-max-icont-min-icon

வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட தூய்மை பணியாளரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

கோவையை அடுத்த குனியமுத்தூர் அருகே உள்ள பி.கே.புதூரை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 42). இவர் கோவையில் உள்ள ஒரு மாநகராட்சி ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு சங்கீதா, கோகிலா ஆகிய மகள்கள் உள்ளனர்.

ரங்கசாமி கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இதற்கிடையே ரங்கசாமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ பதிவு செய்து நண்பர்களுக்கு அனுப்பினார். அந்த வீடியோவில், பெண் ஊழியர் ஒருவர் உடைமாற்றுவதை செல்போனில் படம் பிடித்ததாக கூறி தன்னை மனவேதனைக்கு ஆளாக்கியதாகவும், தனது சாவுக்கு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 3 பேர் தான் காரணம் என்று அவர்களின் பெயரையும் குறிப்பிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ரங்கசாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை ரங்கசாமியின்  உடலை வாங்க மறுத்து மனைவி தேவி, மகள்கள் சங்கீதா, கோகிலா மற்றும் உறவினர்கள் கோவை கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ரங்கசாமியின் மகள் சங்கீதா கூறும்போது, எனது தந்தையின் தற்கொலைக்கு காரணமான மருத்துவமனை ஊழியர், நர்சு உள்ளிட்ட 3 பேரை கைது செய்ய வேண்டும். அது வரை எனது தந்தையின் உடலை வாங்க மாட்டோம், என்றார்.

உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Next Story