முள்ளுக்குறிச்சியில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு
ராசிபுரம் அருகே முள்ளுக்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானம் மற்றும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்,
ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளுக்குறிச்சியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் நடந்து வரும் முன்னேற்பாடு பணிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ஜல்லிக்கட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலையும், மாடுபிடி வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்ட பாதையையும் கலெக்டர் பார்வையிட்டார். மேலும் ஜல்லிக்கட்டு மைதானத்திற்குள் பார்வையாளர்கள் நுழையாமல் இருக்க பெரிய அளவில் இரும்பு கம்பிகளை கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டு இருப்பதையும் அவர் ஆய்வு செய்தார்.
அதேபோல் பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட ஏதுவாக அமைக்கப்பட்டு உள்ள பார்வையாளர்கள் கூடம், ஜல்லிக்கட்டு காளைகளை ஆய்வு செய்ய உள்ள கால்நடை பராமரிப்பு துறையினருக்காக அமைக்கப்பட்டிருக்கும் பந்தல் மற்றும் காயமடைபவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க ஏதுவாக மருத்துவ குழுவினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாடுகள் வெளியேறும் இடத்தில் மைதானத்தை சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டு இருப்பதையும், மாடுகள் மைதானத்துக்குள் செல்லும் பாதையில் பந்தல் அமைக்கப்பட்டு வரும் பணியினையும் அவர் பார்வையிட்டார். ஜல்லிக்கட்டு மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பாதுகாப்பாக தேங்காய்நார் பரப்பப்பட வேண்டும் என்றும், தேவையான ஒலிபெருக்கி வசதிகள் ஏற்பாடு செய்வதோடு, அரசின் விதிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு கலெக்டர் மெகராஜ் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல், ராசிபுரம் தாசில்தார் பாஸ்கரன், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் இ.கே.பொன்னுசாமி, கார்கூடல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் கே.பி.எஸ்.சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story