கரூர் மாவட்ட கலெக்டர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்


கரூர் மாவட்ட கலெக்டர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்
x
தினத்தந்தி 6 Feb 2021 8:42 AM IST (Updated: 6 Feb 2021 8:44 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.

கரூர்,

தமிழக அரசு எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டு வழக்கம்போல செயல்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கொரோனாவுக்கு தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவில் முதல்கட்டமாக மருத்துவ ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு அதற்கான மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.
  
கரூரில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர், சுகாதாரத்துறையின் மூலம் கரூர் மாவட்டத்தில் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாவட்ட கலெக்டர் மலர்விழி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

முன் களப்பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, நானும் தடுப்பூசி போட்டுக் கொண்டேன்.

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதில் எந்த விதமான உடல் உபாதைகளும் ஏற்படவில்லை. எனவே, தேவையற்ற வீண் வதந்திகளை நம்பாமல் அனைத்துத்துறைகளின் முன்களப்பணியாளர்கள் தாமாக முன்வந்து இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் வரக்கூடிய தேர்தல் பணிகளில் ஈடுபட பேருதவியாக இருக்கும்.

கரூர் மாவட்டத்தில் முன்களப்பணியாளர்கள் 10,011 பேர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான கணக்கீடுகள் எடுக்கப்பட்டு, இதுவரை 20 சதவீதம் அதாவது 2, 468 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அருள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சந்தியா மற்றும் தாசில்தார்கள், வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி மையப்பணியாளர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
 இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பிரேம் நவாஸ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story