குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறந்ததால் பொதுமக்கள் போராட்டம்
ராஜபாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறந்ததால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது இ.எஸ்.ஐ. நெசவாளர் குடியிருப்பு. இங்கிருந்து இந்திரா நகர் செல்லும் வழியில், தனியார் நிலத்தில் கட்டிடம் கட்டப்பட்டு, கடந்த அக்டோபர் 11-ந் தேதி புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு வருவாய் துறை சார்பில் ஏற்பாடு நடந்தது.
அப்போது அப்பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால், அருகே உள்ள புகழ் பெற்ற வேட்டை வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என குற்றம் சாட்டினர்.
புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சுற்றி உள்ள இந்திரா நகர், இ.எஸ்.ஐ. நகர், நெசவாளர் காலனி, லீலாவதி நகர், கற்கன் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் திரண்டு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடை திறக்கப்படாது என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த அதே இடத்தில், மதுபானங்கள் கொண்டு வரப்பட்டு, டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதை அறிந்து அப்பகுதி பொது மக்கள் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி தலைவர் இசக்கிராஜா தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியவுடன் உடனடியாக டாஸ்மாக் கடை மூடப்பட்டு, போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் கடையை மூடும் வரை கலைந்து செல்ல மறுத்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டம் குறித்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்களுக்கு தகவல் பரவியதை அடுத்து டாஸ்மாக் கடை அமைந்துள்ள இடத்திற்கு பொதுமக்கள் வருகை அதிகரித்தது.
இதனால் பொது மக்களுடன் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி, அங்கிருந்து கலைந்து செல்ல வலியுறுத்தினர். கடையை மூட உறுதி அளிக்கும் வரை கலைந்து செல்ல பொது மக்கள் மறுத்து விட்டனர். டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக ஊராட்சி கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தை மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் அளிக்கும் பட்சத்தில் டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்படும் என்ற அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக் கொண்ட பொது மக்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.பொது மக்களின் இந்த போராட்டத்தால், நெசவாளர் பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.
Related Tags :
Next Story