அரசு ஊழியர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு
கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதால் அரசு ஊழியர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மதுரை,பிப்.6-
கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதால் அரசு ஊழியர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை. இதனால் அரசு ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள திருவள்ளூவர் சிலை முன்பு அரசு ஊழியர்கள் போராட்டம் செய்தனர். அப்போது உடனடியாக தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
அதன்பின் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். இவர்களை தடுப்பதற்காக போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு தடுப்புகளை அமைத்தனர்.
கோஷம்
ஆனால் அரசு ஊழியர்கள் அந்த தடுப்புகளை அப்புறப்படுத்திவிட்டு முன்னேறி வந்தனர். அதனால் சுதாரித்து கொண்ட போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவாயில் இரும்பு கதவை மூடி விட்டு அங்கு அரணாக நின்று கொண்டனர். ஆனால் அரசு ஊழியர்கள் கோஷம் எழுப்பியப்படி முன்னேறி வந்தனர். இதனால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை முன்னேற விடாமல் தடுப்பதற்கு கடுமையாக போராடினர். அதில் சில போலீசாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டது. ஒரு போலீசாருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் சமரசம் ஏற்பட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக நுழைவாயில் பல மணி நேரம் முழுமையாக மூடப்பட்டு இருந்தது. அதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வர முடியாமலும், உள்ளே இருப்பவர்கள் வெளியே வர முடியாமலும் தவித்தனர்.
Related Tags :
Next Story