கோவிலில் கொள்ளை


கோவிலில் கொள்ளை
x
தினத்தந்தி 6 Feb 2021 8:33 PM IST (Updated: 6 Feb 2021 8:33 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டு இருந்த 5 கிேலா ஐம்பொன் கவசம், 10 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

பெரியகுளம்:

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரம் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. 

இந்த கோவிலில் நேற்று முன்தினம் தை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு நகைகள் அணிவித்து பூஜைகள் நடைபெற்றன. 

பின்னர் இரவில் கோவிலை பூட்டி விட்டு பூசாரி முருகன் (வயது 55) வீட்டுக்கு சென்று விட்டார்.


கொள்ளை


பின்னர் நேற்று காலை வழக்கம்போல் பூசாரி கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த சுமார் 5 கிலோ எடையில் செய்யப்பட்ட ஐம்பொன்னால் ஆன கவசம், 10 பவுன் நகைகள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. 


மேலும் கோவிலில் உள்ள உண்டியலும் திருடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து கோவில் பூசாரி பெரியகுளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 


மோப்பநாய்


அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தேனியில் இருந்து மோப்பநாய் பைரவ் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 

அப்போது மோப்பநாய் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. 

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கோவிலின் பூட்டை மர்மநபர்கள் உடைத்து உள்ளே புகுந்து ஐம்பொன் கவசம், நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

---------

Next Story