மேகமலை வன உயிரின சரணாலயம் புலிகள் காப்பகமாக அறிவிப்பு


மேகமலை வன உயிரின சரணாலயம் புலிகள் காப்பகமாக அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Feb 2021 8:56 PM IST (Updated: 6 Feb 2021 8:56 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்துடன் மேகமலை வன உயிரின சரணாலயம் இணைக்கப்பட்டு புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சின்னமனூர்:

தேனி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் மேகமலை வன உயிரின சரணாலயம்  அமைந்துள்ளது. 

இங்கு யானை, கரடி, சிறுத்தை, புலி, மான், உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன. 

அதோடு பறவைகள், பூச்சிகள் போன்ற பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. 


மேகமலை வன உயிரின சரணாலயம் 626 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டதாகும். 

இந்த சரணாலயத்திற்கு அருகே கேரளாவில் உள்ள பெரியார் புலிகள் காப்பகம் மற்றும் 485 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உள்ளது. 


புலிகள் காப்பகம்

மேகமலை வன உயிரின சரணாலயத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். 

இங்கு ஆரம்பத்தில் 8 புலிகள் மட்டுமே  இருந்தன. பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தற்போது 11 பெண் புலிகள், 3 ஆண் புலிகள் என மொத்தம் 14 புலிகள் இருப்பது தெரியவந்தது.


இந்தநிலையில் மேகமலை வன உயிரின சரணாலயத்தையும், ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தையும் இணைத்து ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகமாக மாற்ற வனத்துறை சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 


இந்த பரிந்துரையை தேசிய புலிகள் காப்பக அமைப்பு ஆராய்ந்து, இரு சரணாலயங்களையும் இணைத்து ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகமாக அறிவித்துள்ளது. 

தற்போது அறிவித்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் இந்தியாவில் 51-வது புலிகள் காப்பகமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வன ஆர்வலர்கள் வரவேற்பு


இந்த அறிவிப்பை வன ஆர்வலர்கள் வரவேற்று உள்ளனர். 

இந்த புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை கடுமையாக்கி வனவிலங்குகள் வேட்டையை தடுத்து, வேட்டை தடுப்பு காவலர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் வசதியை வனப்பகுதியிலேயே ஏற்படுத்தி தர வேண்டும். 

புலிகள் காப்பகத்திற்கு அருேக குடியிருக்கும் மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வது போல் மேகமலையிலும் ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

----


Next Story