சரணாலய நீர்நிலைகளில் மீன்குஞ்சுகள் விடப்பட்டன
பறவைகளின் உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சார்பில் 5 பறவைகள் சரணாலய நீர்நிலைகளில் மீன்குஞ்சுகள் விடப்பட்டன.
ராமநாதபுரம்,
பறவைகளின் உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சார்பில் 5 பறவைகள் சரணாலய நீர்நிலைகளில் மீன்குஞ்சுகள் விடப்பட்டன.
பருவமழை
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் இரையை தேடியும், பருவநிலையை அனுபவிக்கும் வகையிலும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். இதேபோன்று கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் அதன்பின்னர் பெய்த தொடர்மழையால் மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் சேர்ந்துள்ளது.
இந்த இயற்கை சூழ்நிலையை அறிந்து ஏராளமான வெளிநாட்டு பறவைகள் ராமநாதபுரம் மாவட்ட நீர்நிலைகளை தேடி வந்து கூடுகட்டி தங்களின் உணவு தேவைகளை நிறைவு செய்து வருகின்றன. இந்த பறவைகள் வரும் மார்ச் மாதம் வரை இங்குள்ள சரணாலயங்களில் தங்கிஇருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் இந்த பறவைகளின் உணவு தேவையை பூர்த்திசெய்யும் வகையில் வனத்துறை சார்பில் பறவைகள் சரணாலயங்களில் மீன்குஞ்சுகள் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மீன்குஞ்சுகள்
வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த வனஉயிரின வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் உள்ள ராமநாத புரம் தேர்த்தங்கல், காஞ்சிரங்குளம், மேல-கீழச்செல்வனூர், சித்திரங்குடி, சக்கரக்கோட்டை ஆகிய பறவைகள் சரணாலயங்களில் வனத்துறை சார்பில் மீன்குஞ்சுகள் விடப்பட்டன. சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயத்தில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான ஆயிரம் மீன்குஞ்சுகளும், மற்ற சரணாலயங்களில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 2 ஆயிரம் மீன்குஞ்சுகளும் விடப்பட்டன.
பறவைகளுக்கு உணவாகும் வகையில் அதற்கேற்ற புல்கெண்டை மீன் குஞ்சுகளும், ரோகு ரக மீன் குஞ்சுகளும் இவ்வாறு விடப்பட்டன. வனஉயிரின காப்பாளர் மாரிமுத்து உத்தரவின்பேரில் உதவி வனபாதுகாவலர் கணேசலிங்கம், வனச்சரகர் சதீஷ், வனவர் ராஜசேகரன், வனகாப்பாளர் குணசேகரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று காலை 5 பறவைகள் சரணாலயங்களுக்கு நேரில் சென்று இந்த மீன்குஞ்சுகளை நீர்நிலைகளில் விட்டனர்.
பயன்
தற்போது தங்கி உள்ள பறவைகளின் உணவுக்காகவும், வரும்காலங்களில் இரைதேடி வரும் பறவைகளுக்காகவும் இந்த மீன்குஞ்சுகள் பயன் உள்ளதாக இருக்கும். இந்த ஆண்டு அனைத்து நீர்நிலைகளிலும் குறிப்பிடத்தக்க நீர் சேர்ந்துள்ளதால் அடுத்த ஆண்டு வரும் பறவைகளுக்கும் இந்த மீன்குஞ்சுகள் உணவாக அமையும் என்று வனச்சரகர் சதீஷ் தெரிவித்தார்.
Related Tags :
Next Story