காங்கேயம் அருகே உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் நேற்று 18 வது நாளாக யாகம் நடத்தி போராட்டம்


காங்கேயம் அருகே உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் நேற்று 18 வது நாளாக யாகம் நடத்தி போராட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2021 10:10 PM IST (Updated: 6 Feb 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் நேற்று 18- வது நாளாக யாகம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கேயம், 

காங்கேயம் அருகே படியூரில் உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் விவசாய விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை முழுமையாக நிறுத்த வேண்டும். அனைத்து திட்டங்களும் சாலையோரமாக கேபிள் மூலம் அமைக்க வேண்டும். முடிவடையும் நிலையில் உள்ள திட்டங்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலத்திற்கு ஒவ்வொரு முறையில் இழப்பீடு நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

அரசாணை எண் 54 அனைத்து மாவட்டங்களுக்கும் அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் மாத வாடகை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். குறைந்தபட்ச இழப்பீடாக தற்போது ரூ.50 ஆயிரம் அறிவித்துள்ளதை உயர்த்தி ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அறவழியில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள 38 வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்
டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து அரை நிர்வாண போராட்டம், கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம், ரத்தத்தில் உயர்மின்கோபுரம் வேண்டாம் என எழுதி எதிர்ப்பு, கண்களை கட்டிக்கொண்டு போராட்டம், நிலத்தின் பட்டா நகல் எரித்து எதிர்ப்பு, கால்நடைகளுடன் போராட்டம், தென்னை மரக்கன்றுகளுக்கு பூஜை செய்து போராட்டம், முருகன் படம் வைத்து போராட்டம், மணி அடித்தும், பாத்திரங்கள் மூலம் ஒலி எழுப்பியும் போராட்டம், விவசாயிகள் மொட்டை அடித்து போராட்டம்  என பல்வேறு முறைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் 18-ம் நாளான நேற்று மதியம்  அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் யாகம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Next Story