மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி- கடலூா் போலீஸ் சூப்பிரண்டு சாதனை
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கடலூா் போலீஸ் சூப்பிரண்டு சாதனை படைத்தாா்.
கடலூா்:
காவல் துறை சார்பில் மாநில அளவிலான வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டி காஞ்சீபுரம் மாவட்டம் ஒத்திவாக்கத்தில் நடைபெற்றது. இதில் வடக்கு மண்டல காவல்துறை அணி சார்பில் கலந்து கொண்ட கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் மற்றும் ஆயுதப்படை காவலர் வினோத்குமார் ஆகியோர் இணைந்து கார்பன் துப்பாக்கி சுடும் பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
இதேபோல் கடலூர் ஆயுதப்படை காவலர் வினோத்குமார் தனிநபர் கார்பன் துப்பாக்கி சுடுதலில் 2 தங்கப் பதக்கம், ஒரு வெள்ளி பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கம் வென்றார். ரெட்டிச்சாவடி போலீஸ்காரர் ராஜகோபால் தனிநபர் இன்சாஸ் துப்பாக்கி சுடும் பிரிவில் வெண்கல பதக்கம் பெற்றார்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் இரண்டாவது இடத்தையும், துப்பாக்கி பிரிவில் முதலிடத்தையும், கார்பன் துப்பாக்கி பிரிவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்தனர். அதாவது 3 கேடயம், 4 தங்க பதக்கம், 4 வெள்ளி பதக்கம், 4 வெண்கல பதக்கம் என மொத்தம் 17 பதக்கங்கள் பெற்றுள்ளனர்.
இதையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வுக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் சாதனை படைத்த போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
Related Tags :
Next Story