கடலூாில் கொரோனாவுக்கு முதியவர் பலி


கடலூாில் கொரோனாவுக்கு முதியவர் பலி
x
தினத்தந்தி 6 Feb 2021 11:05 PM IST (Updated: 6 Feb 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி உள்பட 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 980 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 24 ஆயிரத்து 629 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ள நிலையில், 286 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளியான உமிழ்நீர் பரிசோதனை முடிவில், புதிதாக 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் பண்ருட்டியை சேர்ந்த கர்ப்பிணிக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரை சேர்ந்தவருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 985 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

முதியவர் பலி

பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் 71 வயது முதியவர். இவர் கொரோனா அறிகுறிகளுடன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரிடம் இருந்து உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் நேற்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 497 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டி உள்ளது.

Next Story