வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 92 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு மத்திய அரசு கொடுத்து வரும் நெருக்கடிகளையும், டெல்லியில் போலீசார் நடத்திய வன்முறைக்கு எதிராக போராட்டம் நடத்திய தலைவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்தும், மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு குறைந்த நிதி ஒதுக்கீடு செய்ததை கண்டித்தும் நாகை அருகே சிக்கலில் நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் கம்யூனிஸ்டு கட்சிகளின் விவசாயிகள் சங்க ஒன்றியக்குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன்.விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் சரபோஜி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பகு மற்றும் மாவட்ட, ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 35 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
இதே போல் கீழ்வேளூர் அருகே சாட்டியக்குடி கடைவீதியில் நடந்த சாலைமறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் முத்தையன் தலைமை தாங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அம்பிகாபதி, துணை செயலாளர் செல்லையன், விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் அபுபக்கர், பாண்டியன், நடராஜன், ராஜேந்திரன் உள்பட கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 2 பெண்கள் உள்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
கீழையூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த விவசாயிகள் சங்கம் சார்பில் கீழையூர் கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில விவசாய சங்க தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் முருகையன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், ராமலிங்கம், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தமிழ்மணி, விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.
Related Tags :
Next Story