புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தஞ்சையில், விவசாயிகள் சாலை மறியல் 25 பேர் கைது


புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தஞ்சையில், விவசாயிகள் சாலை மறியல் 25 பேர் கைது
x
தினத்தந்தி 6 Feb 2021 6:11 PM GMT (Updated: 6 Feb 2021 6:16 PM GMT)

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 25 பேரை கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

மத்தியஅரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை காந்திஜிசாலை இர்வீன்பாலம் அருகே அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று மதியம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சாமி.நடராஜன் தலைமை தாங்கினார். விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நிர்வாகிகள் பாலசுந்தரம், வீரமோகன், செந்தில்குமார், பழனிராஜன், அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மறியலில், மத்தியஅரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் முடிவை தமிழகஅரசு திரும்ப பெற வேண்டும். போராட்டத்தில் பங்கேற்கும் விவசாய சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த மறியலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் கிரு‌‌ஷ்ணன், விவசாயிகள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமார், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைச் செயலாளர் அன்பு, நிர்வாகி அருண்சோரி, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் குருசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் முனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்தினால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளை துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மாநில செயற்குழு உறுப்பினர் சாமி.நடராஜன் நிருபர்களிடம் கூறும்போது, அ.தி.மு.க. அரசு மத்தியில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு தமிழகத்தில் வர இருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்து இரட்டை வேடம் போடுகிறது. தமிழகஅரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்தியஅரசை வலியுறுத்த வேண்டும். டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஒரு கும்பல் ஊடுருவி வன்முறையில் ஈடுபட்டது.

அமைதி வழியில் ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பல ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் குடியரசு தினத்தன்று நடந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் விவசாய சங்க தலைவர்கள் 7 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை தமிழகஅரசு திரும்ப பெற வேண்டும். கைது செய்யப்பட்ட விவசாய சங்க தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

Next Story