திருவையாறு அருகே ரேஷன் கடையின் பூட்டை உடைத்து ரூ.24 ஆயிரம் பொருட்கள் கொள்ளை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
திருவையாறு அருகே ரேஷன் கடையின் பூட்டை உடைத்து ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருவையாறு,
தஞ்சையை அடுத்த திருவையாறு அருகே மகாராஜபுரத்தில் பகுதிநேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை சாத்தனூர் ரேஷன் கடையின் கிளையாகும்.
இந்த கடை வாரத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடையின் விற்பனையாளராக பாலசுப்பிரமணியன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
கடந்த வியாழக்கிழமை அன்று கடையை பூட்டிவிட்டு சென்ற இவர் நேற்று காலை 10.30 மணியளவில் கடையை திறப்பதற்கு வந்தார். அப்போது கடையின் பூட்டு கியாஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. கடையில் இருந்த 5 மூட்டை பருப்பு, 5 மூட்டை சீனி, 25 பெட்டி பாமாயில், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தராசு ஆகியவற்றை காணவில்லை.
மர்ம நபர்கள் அவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு ரூ.24 ஆயிரம் என கூறப்படுகிறது. இதுகுறித்து விற்பனையாளர் பாலசுப்பிரமணியன் மரூர் போலீஸ் நிலையத்துக்கும், கடையின் செயலாளர் தவமூர்த்திக்கும் தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்த மரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கடையை பார்வையிட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் கடையின் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், வீடுகள் அதிகமாக இருக்கும் பகுதியில் ரேஷன் கடையை அமைக்காமல் மெயின் ரோட்டில் சுடுகாடு அருகே அமைத்துள்ளனர். கடை அமைந்துள்ள பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும்.
இந்த பகுதியில் திருட்டு, வழிப்பறி அடிக்கடி நடந்து வருகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் இரவு நேர ங்களில் போலீசார் ரோந்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story