லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது


லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
x
தினத்தந்தி 7 Feb 2021 12:25 AM IST (Updated: 7 Feb 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த விஸ்வரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 54), விவசாயி. இவர் தனது அண்ணன் ரங்கநாதனிடம் இருந்து கடந்த 11.1.2021 அன்று அதே கிராமத்தில் 1 ஏக்கர் 60 சென்ட் நிலத்தை கிரையம் பெற்றார்.
அந்த நிலத்தை பன்னீர்செல்வம் தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தரக்கோரி வா.பகண்டை கிராம நிர்வாக அலுவலரான மூங்கில்பட்டை சேர்ந்த விஸ்வரங்கன் (45) என்பவரை அணுகினார்.

ரூ.3 ஆயிரம் லஞ்சம்

அப்போது பட்டா மாற்றம் செய்து தர வேண்டுமென்றால் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று பன்னீர்செல்வத்திடம் விஸ்வரங்கன் கூறியதாக தெரிகிறது. 
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பன்னீர்செல்வம், இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அவர்கள் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை நேற்று பன்னீர்செல்வம் எடுத்துக்கொண்டு வா.பகண்டை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த விஸ்வரங்கனிடம் கொடுத்தார்.
கிராம நிர்வாக அலுவலர் கைது
அந்த பணத்தை வாங்கியபோது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு யுவராஜ், இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், நரசிம்மராவ் ஆகியோர் விரைந்து சென்று கிராம நிர்வாக அலுவலர் விஸ்வரங்கனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். 

அதிகாரிகள் கலக்கம்

ஏற்கனவே விழுப்புரத்தில் கடந்த 2-ந்தேதியன்று திருமண நிதி உதவித்தொகை வழங்க ஒப்புதல் அளிக்க ரூ.1,500 லஞ்சம் வாங்கியது தொடர்பாக சமூகநல விரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். 
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த தொடர் அதிரடி நடவடிக்கையால் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.


Next Story