நீதிமன்றங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
நீதிமன்றங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.6.5 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
கடலூா் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கரும்பூரை சேர்ந்தவர் ராதாமணி மகன் சாந்தாமணி (வயது 34). இவருக்கும் நெல்லிக்குப்பம் ஜீவா நகரை சேர்ந்த செந்தில்குமார் (27) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
அப்போது செந்தில்குமார், தான் விழுப்புரம் மாவட்டத்தில் தலைமை காவலராக வேலை பார்ப்பதாகவும், பல பேருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் சாந்தாமணியிடம் கூறினார்.
இதை நம்பிய சாந்தாமணி தனக்கும் அரசு வேலை வாங்கி கொடுக்கும்படி கூறியுள்ளார். அதற்கு அவர், விழுப்புரம் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை காலியிடமாக உள்ளதாகவும், தனக்கு ரூ.2½ லட்சம் கொடுத்தால், ஒரு மாதத்தில் அந்த வேலை வாங்கி கொடுப்பதாக தெரிவித்தார்.
உடனே அவர் முதற்கட்டமாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தனது மகனுக்கும் நீதிமன்றத்தில் வேலை வாங்கி கொடுக்கும்படி கேட்டு, செந்தில்குமாரிடம் ரூ.2½ லட்சம் கொடுத்துள்ளார்.
மிரட்டல்
பணத்தை பெற்றுக்கொண்ட செந்தில்குமார் 2 பேருக்கும் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதனால் சாந்தாமணி, ரவிச்சந்திரன் ஆகியோர் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கும்படி செந்தில்குமாரிடம் கேட்டனர்.
அதற்கு அவர் பணத்தை கொடுக்க முடியாது என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு அவரது மனைவி பியூலாவும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர்கள் கடலூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செந்தில்குமார் நீதிமன்றங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி சாந்தாமணி, ரவிச்சந்திரன் ஆகியோரிடம் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதேபோல் சத்தியராஜ் என்பவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் ரூ.2½ லட்சம் பெற்று மோசடி செய்ததும் தெரிந்தது.
பணி நீக்கம்
இதையடுத்து செந்தில்குமாரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள பியூலாவை தேடி வருகின்றனர். கைதான செந்தில்குமார் கடலூர் மாவட்ட காவல்துறையில் கருவூலக தலைமை காவலராக பணிபுரிந்த போது, காவலர்களுக்கான பணப்பலன்களை கையாடல் செய்தது தொடர்பாக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story