நெல்லை மாவட்டத்தில் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி தொடங்கியது


நெல்லை மாவட்டத்தில் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி தொடங்கியது
x
தினத்தந்தி 7 Feb 2021 3:34 AM IST (Updated: 7 Feb 2021 3:34 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி  தொடங்கியது.

கணக்கெடுப்பு பணி

தமிழகத்தில் 5-வது தேசிய குடும்பநல கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலுடன் இந்திய மக்கள்தொகை ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து கணக்கெடுப்பு பணியை மேற்கொள்கின்றன.
நெல்லை மாவட்டத்திலும் இந்த கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் ஆகியோர் வழிகாட்டுதல்படி தகவல் சேகரிப்பாளர்கள் பணியை தொடங்கினர். மேற்பார்வையாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான குழுவினர் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.

75 கேள்விகள்

நெல்லையில் சந்திப்பு சிந்துபூந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு நடந்தது. ஏற்கனவே உள்ள தகவல் பதிவுகளை கொண்டு கணினியில் குலுக்கல் முறையில் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. அந்தந்த வீடுகளுக்கு தகவல் சேகரிப்பாளர்கள் மடிக்கணினியுடன் சென்றனர். அவர்களுக்கு உதவியாக மருத்துவ துறை பணியாளர்கள் சென்றனர். 

அப்போது வீட்டில் உள்ள அடிப்படை வசதிகள், தாய், சேய் நலம், குழந்தைகள் பிறப்பு, இறப்பு விவரங்கள், ஊட்டச்சத்து, ரத்தசோகை, கருவுறுதல், குடும்ப கட்டுப்பாடு, சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து கேள்விகள் கேட்டு அதற்கு குடும்பத்தினர் அளிக்கும் பதிலை பதிவு செய்து கொண்டனர். மொத்தம் 75 கேள்விகள் வழங்கப்பட்டு உள்ளன, இதில் அந்தந்த குடும்ப சூழ்நிலைக்கு தேவையான கேள்விகளை மட்டும் கேட்டு பதிவு செய்தனர். இதுதவிர அவரவர் வீடுகளில் பயன்படுத்தும் உப்பில் அயோடின் சத்து உள்ளதா? என்பதையும் பரிசோதித்து உறுதி செய்து பதிவு செய்து கொண்டனர்.

15 நாட்கள்

இதுகுறித்து கணக்கெடுப்பாளர்கள் கூறுகையில், ‘‘நெல்லை மாவட்டத்தில் மொத்தம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் மொத்தம் 42 பகுதிகள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் 15 நாட்களுக்கு கணக்கெடுப்பு பணி நடைபெறும்’ என்றனர்.

Next Story