நலவாழ்வு முகாமுக்கு உற்சாகத்துடன் புறப்பட்ட கோவில் யானைகள்
நெல்லை மாவட்டத்தில் இருந்து கோவில் யானைகள் உற்சாகத்துடன் நலவாழ்வு முகாமுக்கு புறப்பட்டு சென்றன.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் இருந்து கோவில் யானைகள் உற்சாகத்துடன் நலவாழ்வு முகாமுக்கு புறப்பட்டு சென்றன..
நலவாழ்வு முகாம்
கோவை அருகே மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் பவானி ஆற்றுப்படுகையில் ஆண்டுேதாறும் யானைகள் நலவாழ்வு முகாம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான முகாம் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 48 நாட்கள் நடக்கிறது.
இந்த முகாமில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி பங்கேற்று வருகிறது. இந்த ஆண்டும் முகாமில் கலந்துகொள்கிறது.
காந்திமதி யானை புறப்பட்டது
இதையொட்டி காந்திமதி யானை மற்றும் பாகன்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை காந்திமதி யானையை முகாமுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கோவிலில் வைத்து யானைக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளிக்கு யானை அழைத்து வரப்பட்டது. அங்குள்ள மேடையில் யானையை ஏற்றி அதன் மூலம் லாரியில் ஏற்றப்பட்டது.
பின்னர் யானைக்கு சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை நெல்லை மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். அங்கிருந்து யானை தும்பிக்கையை தூக்கி காட்டியபடி முகாமுக்கு உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றது.
பாகன்கள்-ஊழியர்கள்
யானையுடன் பாகன்கள் ராம்தாஸ், விஜயகுமார் மற்றும் கோவில் ஊழியர்கள் 3 பேர் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர், நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ராமராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் யானைகள் குறுங்குடி வள்ளி, சுந்தரவல்லி, சங்கரன்கோவில் கோமதி யானை ஆகியவையும் லாரிகளில் நலவாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story