பெருந்துறை மருத்துவக்கல்லூரி கட்டணம் தொடர்பான பிரச்சினை குறித்து முதல்-அமைச்சரிடம் பேசுவேன்; தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. உறுதி
பெருந்துறை மருத்துவக்கல்லூரி கட்டணம் தொடர்பாக முதல்-அமைச்சரிடம் பேசுவதாக தொடர் போராட்டம் நடத்தும் மாணவ-மாணவிகளிடம் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.
ஈரோடு
பெருந்துறை மருத்துவக்கல்லூரி கட்டணம் தொடர்பாக முதல்-அமைச்சரிடம் பேசுவதாக தொடர் போராட்டம் நடத்தும் மாணவ-மாணவிகளிடம் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.
எம்.எல்.ஏ. சந்திப்பு
பெருந்துறையில் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த கல்லூரி மாணவ-மாணவிகள், மற்ற அரசு கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தையே தங்கள் கல்லூரியிலும் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக கல்லூரி முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. போராட்டத்தில் ஈடுபடும் மாணவ-மாணவிகளை சந்தித்தார். அவர் மாணவ-மாணவிகளிடம் போராட்டம் மற்றும் கோரிக்கை குறித்து அரசின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி உயர் மட்டத்தில் ஆலோசனை நடந்து வருகிறது. எனவே மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட வேண்டும். உரிய அவகாசம் கொடுத்தால் அதற்குள் நல்ல தீர்வு கிடைக்கும் என்றார். அதற்கு மாணவ-மாணவிகள் நாங்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுகிறோம். அரசு அறிவிப்பு வந்தால் உடனடியாக போராட்டத்தை கைவிடுகிறோம் என்றனர்.
பின்னர் பேசிய எம்.எல்.ஏ., உங்கள் போராட்டம் நியாயமானதுதான். அதற்காக வெயிலில் உங்களை வருத்திக்கொண்டு சிரமப்பட்டு போராடவேண்டாம். உங்களுக்காக கல்லூரி வளாகத்துக்குள்ளேயே சாமியானா பந்தல், விரிப்புகள் வசதி செய்யப்படும். அங்கு போராட்டம் செய்யுங்கள். நான் முதல்-அமைச்சருக்கு உங்கள் கோரிக்கையை கொண்டு சென்று விரைவில் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்தார்.
உறுதி
பின்னர் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போக்குவரத்துக்கழகத்தின் கீழ் இயங்கி வந்தது. இந்த மருத்துவக்கல்லூரிக்கும் மற்ற கல்லூரிகளுக்கும் வேறுபாடு உள்ளது. இந்த கல்லூரியை தொடங்கும்போதே, போக்குவரத்துக்கழக ஊழியர்களின் பங்களிப்போடு தொடங்கப்பட்டது. அப்போது போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர் மற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது என்று உறுதி அளிக்கப்பட்டது. அரசு மருத்துவக்கல்லூரியாக மாற்றப்பட்டாலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதியின் படி 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் என்றாலும் அவர்களுக்கு இடஒதுக்கீட்டின் படி இடம் கிடைக்கும்.
இந்த இடஒதுக்கீடு முறை தொடர்வதால், கட்டண நிர்ணயம் செய்வதில் பல சிக்கல்கள் இருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அரசின் கூடுதல் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நான் பேசினேன். அப்போது உயர் மட்ட அளவில் இதுபற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர். நான் இதுபற்றி முதல்-அமைச்சரிடமும் கோரிக்கை வைத்து விரைவில் மாணவ-மாணவிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தேவையான முயற்சிகளை மேற்கொள்வேன்.
இவ்வாறு தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கூறினார்.
Related Tags :
Next Story