புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் சாலை மறியல்; 68 பேர் கைது


புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் சாலை மறியல்; 68 பேர் கைது
x
தினத்தந்தி 7 Feb 2021 4:53 AM IST (Updated: 7 Feb 2021 4:53 AM IST)
t-max-icont-min-icon

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நெல்லை, தென்காசியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 68 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நெல்லை, தென்காசியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 68 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல் போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் நேற்று நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடந்தது. 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழு உறுப்பினர் சுடலைராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினர். 

இதைத்தொடர்ந்து விவசாயிகள் நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

68 பேர் கைது

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ராஜகுரு, நெல்லை தாலுகா தலைவர் மணி சுடலை, பாப்பாகுடி ஒன்றிய தலைவர் மாரிச்செல்வம், மாவட்ட குழு உறுப்பினர் முருகன் உள்பட 28 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல் தென்காசியில் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜெயராஜ், கணபதி, வேல் மயில், உச்சிமாகாளி, அசோக், வட்டார செயலாளர்கள் கண்ணன், ராமகிருஷ்ணன், திருமலை குமாரசாமி மற்றும் ஒரு பெண் உட்பட 40 பேர் கலந்து கொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். பின்னர் அவர்களை தென்காசி போலீசார் கைது செய்தனர்.

Next Story