நாமக்கல்லில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி பெண் தனது மகனுடன் தர்ணா


நாமக்கல்லில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி பெண் தனது மகனுடன் தர்ணா
x
தினத்தந்தி 7 Feb 2021 5:47 AM IST (Updated: 7 Feb 2021 5:50 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி 6 வயது மகனுடன் பட்டதாரி பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

நாமக்கல்,

பொள்ளாச்சியை சேர்ந்தவர் சண்முகபிரியா (வயது 38). எம்.பி.ஏ., பட்டதாரி. தற்போது இவர் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவரது முதல் கணவர் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதையடுத்து நாமக்கல் அருகே உள்ள விட்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் கருப்பண்ணன் (40) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இதை தொடர்ந்து தம்பதியினர் இருவரும் நாமக்கல்லில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தனர். தற்போது இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான். இதற்கிடையே கருப்பண்ணன் பெயரில் உள்ள சொத்தை அவரது சகோதரர் பெயருக்கு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.
இதை சண்முகபிரியா தட்டிக்கேட்டு உள்ளார். இதனால் கருப்பண்ணன், சண்முகபிரியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து தாயார் வீட்டிற்கு சென்ற கருப்பண்ணன், மனைவிக்கு செலவுக்கு பணம் கொடுக்காமலும், அவரை சந்திக்காமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

திடீர் தர்ணா

இந்த நிலையில் நேற்று விட்டமநாயக்கன்பட்டிக்கு தனது மகனுடன் சென்ற சண்முக பிரியா கணவர் கருப்பண்ணன் வசித்து வரும் வீட்டின் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் எனவும், உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அவரிடம் நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story