அரசின் பரிந்துரை விலையாக கரும்பு டன்னுக்கு ரூ.4,500 வழங்க விவசாயிகள் கோரிக்கை
அரசின் பரிந்துரை விலையாக கரும்பு டன்னுக்கு ரூ.4,500 வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மங்களமேடு,
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள சின்னாற்றில் பெரம்பலூர் சர்க்கரை ஆலை அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ஞானமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை நீக்க வேண்டும். தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பழுதடைந்த எந்திரங்களை மாற்ற வேண்டும். 2020-21-ம் ஆண்டுக்கான மாநில அரசின் பரிந்துரை விலையாக டன்னுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும். விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது. அதேபோல் கல்விக்கடன் மற்றும் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராசேந்திரன், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் சீனிவாசன், கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் டி.எஸ்.சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் விவசாயிகள் சர்க்கரை ஆலையில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின் தலைமை அதிகாரி முகமது அஸ்லாமை சந்தித்தனர். அப்போது அவர், வருகிற 17-ந் தேதிக்குள் எந்திரங்களை சரி செய்து ஆலையை இயக்குவதாக விவசாயிகளிடம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story