மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்தபோது கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்


மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்தபோது கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2021 3:51 AM GMT (Updated: 7 Feb 2021 3:51 AM GMT)

மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்தபோது கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து போலீசாரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பூந்தமல்லி, 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் அரசு பஸ் வந்தது. அப்போது பஸ் கண்டக்டர் ஏழுமலை (வயது 41) கையில் இருந்த பணப்பையை மர்மநபர்கள் பறித்து சென்றார். அதில் ரூ.80 ஆயிரம் மற்றும் சில்லரைகள் வைத்து இருந்தார்.

இதுபற்றி அவர் அளித்த புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில் அவர்கள் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா (55), கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் (19) என்பதும், இவர்கள்தான் கண்டக்டர் ஏழுமலையிடம் இருந்த பணப்பையை பறித்து சென்றதும் தெரிந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதி தப்பி ஓட்டம்

பின்னர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக இருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் இரவு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்து இருவரையும் வெளியே அழைத்து வந்தனர். அப்போது கிருஷ்ணா என்ற கைதி திடீரென போலீசாரை தள்ளி விட்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசாரிடம் சிக்காமல் கைதி தப்பி ஓடி மாயமாகிவிட்டார்.

அவர், பல வருடங்களாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், அங்கு படுத்து தூங்குபவர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும், இதில் போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்ததும் தெரிந்தது. தப்பி ஓடிய கைதியை போலீசார் தேடி வருகிறார்கள். கைதான மற்றொரு கைதி பிரகாசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story