போலி விமான டிக்கெட்: சென்னை விமான நிலையத்தில் புதுப்பெண் கைது
திருமணமான 3-வது வாரத்தில் சார்ஜா செல்லும் கணவரை வழியனுப்ப போலி விமான டிக்கெட்டுடன் சென்னை விமான நிலையம் வந்த புதுப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து சாா்ஜாவுக்கு சிறப்பு விமானம் சென்றது. முன்னதாக அதில் செல்ல இருந்த பயணிகள் பாதுகாப்பு சோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏற சென்றனர்.
அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரை சோ்ந்த சானா (வயது23) என்ற பெண், விமான நிலையத்தில் இருந்து வெளியே வர முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்படை போலீசார் அந்த பெண்ணை நிறுத்தி விசாரித்தனர்.
போலி விமான டிக்கெட்
அதற்கு அவர், சார்ஜா செல்லும் தனது கணவர் நிவாஸ் ஷேக் (25) என்பவரை வழியனுப்ப வந்ததாக கூறினார். அவரிடம் இருந்த டிக்கெட்டை ஆய்வு செய்த போது அது போலியானது என தெரியவந்தது.
நிவாஸ் ஷேக் செல்லும் விமான டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து, அதை காட்டி தானும் சார்ஜா செல்வதுபோல் நடித்து விமான நிலையத்துக்குள் சென்றுவிட்டு வந்ததை கண்டுபிடித்தனர். அவர் விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
புதுப்பெண்
விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து இளம்பெண் சானாவிடம் விசாரித்தார். அப்போது போலீசாரிடம் அவர் கூறியதாவது:-
நாங்கள் 3 வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதி. எனது கணவா் வேலைக்காக சாா்ஜா செல்கிறாா். அவரை வழியனுப்ப நானும் அவருடன் சென்னை விமான நிலையம் வந்தேன். ஆனால் விமான நிலையத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதியில்லை என்றனர்.
விமான நிலையத்தில் எனது கணவருடன் 2 மணி நேரம் சேர்ந்து இருக்க ஆசைப்பட்டேன். எனவே எனது கணவரின் உணமையான பயண டிக்கெட்டை கலா் ஜெராக்ஸ் எடுத்து, அந்த ஜெராக்ஸ் டிக்கெட்டில் எனது பெயரையும் இணைத்து போலியான இ-டிக்கெட் தயாா் செய்தோம்.
கைது
அந்த போலி இ-டிக்கெட்டை காட்டிதான் விமான நிலையத்துக்குள் பாதுகாப்பு சோதனை நடக்கும் பகுதி வரை ஒன்றாகவே சென்றோம். அதிகாரிகள் யாரும் அதை கண்டுபிடிக்கவில்லை. அதன்பின்பு நானும், எனது கணவரும் சிறிது நேரம் விமான நிலையத்தில் பேசிக்கொண்டு அமா்ந்திருந்தோம்.
பின்னர் அவா் தனது உண்மையான டிக்கெட் மூலம் விமானத்தில் சாா்ஜாவிற்கு புறப்பட்டு சென்றாா். நான் அதே போலி இ-டிக்கெட்டுடன் வெளியே வந்தேன். நான் செய்தது தவறுதான். புதிதாக திருமணமான கணவரை விட்டு பிரிய மனம் இல்லாமல் இதுபோல் செய்து விட்டேன். என்னை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று கூறி போலீசாரிடம் கெஞ்சியபடி அழுதார்.
இது தொடர்பாக விமான நிலைய போலீசார் புதுப்பெண் சானாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story