மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் பதவிக்கான நேர்முகத்தேர்வு முடிவு வெளியீடு


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் பதவிக்கான நேர்முகத்தேர்வு முடிவு வெளியீடு
x
தினத்தந்தி 7 Feb 2021 9:57 AM IST (Updated: 7 Feb 2021 9:57 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் பதவிக்கான நேர்முகத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

சென்னை, 

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) மத்திய ஆயுதப்படை காவல் உதவி கமாண்டன்ட் பதவிக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்வை நடத்தி வருகிறது. இந்த பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட உடல் தகுதி, கல்வித்தகுதி தேவை.

அந்தவகையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி 323 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை யு.பி.எஸ்.சி. வெளியிட்டது. விண்ணப்பித்த தேர்வர்களுக்கு 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி எழுத்துதேர்வு நடத்தப்பட்டு, தேர்வு முடிவு அக்டோபர் 18-ந்தேதி வெளியானது.

அதில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 215 பேர் அடுத்தகட்டமாக உடல்தகுதி தேர்வு, உடல்திறன் சோதனை தேர்வு மற்றும் மருத்துவ தகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவற்றில் தேறிய 1,054 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

மனிதநேய மையத்தில் படித்த 4 பேர் வெற்றி

இந்த நேர்முகத்தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் சிறந்த பயிற்றுனர்களை கொண்டு, அதற்காக விண்ணப்பித்த அனைவருக்கும் தீவிர பயிற்சி அளித்தது.அதனைத்தொடர்ந்து நேர்முகத்தேர்வு 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த எஸ்.பாக்கியகவுதம், எஸ்.கிஷன்குமார், ஜெ.ஸ்ரீதர், ஆர்.கார்த்திகேயன் ஆகிய 4 பேர் வெற்றி பெற்று மத்திய ஆயுதப்படை காவல் உதவி கமாண்டன்ட் பதவிக்கு தேர்வு பெற்று இருக்கின்றனர்.

உயர்ந்த நோக்கத்தோடு பயிற்சி

மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் மூலம் தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் இந்திய அளவில் உயர்பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்றவற்றிற்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, கடந்த 14 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., இந்திய வனத்துறை பணி ஆகிய பதவிகளுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1, 2, 2ஏ, சப்-இன்ஸ்பெக்டர், உதவி என்ஜினீயரிங் போன்ற பதவிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கு பெற்றவர்களில் இதுவரை 3 ஆயிரத்து 541 பேர் வெற்றி பெற்று மத்திய மற்றும் மாநில அளவில் பல்வேறு உயர் பதவிகளில் இருக்கின்றனர் என்று மனிதநேய பயிற்சி மையத்தின் கவுரவ இயக்குனர் எம்.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Next Story