ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
திருவள்ளூர் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
சென்னை,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் கே.வி.ஆர். நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 46). இவருக்கு மஞ்சுளா (42) என்ற மனைவியும், இந்துமதி (28), மேகலா (25) என்ற 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.
பாஸ்கரன் கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பாஸ்கரன், திடீரென தனது அறையில் உள்ள மின்விசிறியில் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உருக்கமான கடிதம்
இதுபற்றி தகவல் அறந்து வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மேஜை மீது அவர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு எழுதியதாக இருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
அதில், ‘நான் 1998-ம் ஆண்டு முதல் இதுநாள் வரை ஊராட்சி செயலாளராக எனது பணியில் எந்த தவறுகளும் நடக்காமல் பணி செய்து வந்துள்ளேன். ஆனால் ஊராட்சியில் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இந்த தவறான முடிவுக்கு தள்ளி விட்டார்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து பாஸ்கரனின் மனைவி மஞ்சுளா அளித்த புகாரின்பேரில் திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சாலை மறியல்
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் ஊராட்சி அலுவலர்கள் சங்க தலைவர் மகேந்திரன் தலைமையில் அனைத்து ஊராட்சி செயலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பாஸ்கரனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்களும் அங்கு குவிந்தனர்.
அப்போது அவர்கள், பாஸ்கரனின் சாவுக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீரென ஆஸ்பத்திரி அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை திருவள்ளூர் தாலுகா போலீசார் சமரசம் செய்து கலைந்துபோக செய்தனர்.
Related Tags :
Next Story