வேலூரில் விதியை மீறி அ.தி.மு.க.வினர் பேனர் வைப்பு


வேலூரில் விதியை மீறி அ.தி.மு.க.வினர் பேனர் வைப்பு
x
தினத்தந்தி 7 Feb 2021 5:44 PM IST (Updated: 7 Feb 2021 5:44 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் விதியை மீறி அ.தி.மு.க.வினர் பேனர் வைத்துள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. கூறினார்.


வேலூர்

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சாத்தியம் அல்ல

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்போன் மூலம் பொதுமக்கள் புகார்கள் தெரிவித்தால், அதன்பேரில் குறைகளை நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கிறார். அது சாத்தியம் அல்ல. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியை பார்த்து முதல்-அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கிறார். சட்டம் -ஒழுங்கை கையில் வைத்திருக்கும் அரசு. காவல் துறையையே கையில் வைத்திருப்பவர் முதல்-அமைச்சர். இப்படி இருந்தும் சசிகலா வருகையால் சட்டம் ஒழுங்கு கெடும் என்று காவல்துறையில் அமைச்சர்கள் புகார் அளித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் சிறையில் இருக்க தி.மு.க. தான் காணம் என முதல்-அமைச்சர் கூறுகிறார். ஆனால் நாங்கள் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த போதும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். தற்போதும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

விதியை மீறி பேனர்

முதல் -அமைச்சர் வருகைக்காக காட்பாடி ரெயில்வே பாலத்தில் தார் கொட்டி சாலை அமைத்துள்ளனர். ரூ.2 கோடி ரூபாயில் காட்பாடி ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த காரியத்தால் சாலை சீரமைப்பு பணி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி விதியை மீறி வேலூரில் அ.தி.மு.க.வினர் பேனர் வைத்துள்ளனர். பேனர் வைக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையே அ.தி.மு.க.வினர் மதிக்கவில்லை. மனித உரிமை ஆணையம் குறித்த உத்தரவையா மதிக்க போகிறார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூருக்கு வந்தார். நாங்கள் என்ன இப்படியா பேனர் வைத்தோம். பேனர் வைப்பதில் டாக்டரேட் பட்டம் வாங்கியவர்கள் தி.மு.க.வினர். ஆனால் இன்றைக்கு நாங்களே அடக்கமாக உள்ளோம்.

முதலில் கூறியவர் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வோம் என்று முதலில் கூறியவர் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் விவசாய கடனை தள்ளுபடி செய்து சரித்திரம் படைத்தோம். மு.க.ஸ்டாலின் கூறியதை தான் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியை விட்டு செல்லும் போது தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் இருந்தது. ஆனால் தற்போது ரு.7 லட்சம் கோடி கடன் உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் சரியாக கொடுக்க முடியாத நிலையில் அரசு உள்ளது. அரசின் வருமானம் அனைத்தும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்கு தான் செல்லும். அ.தி.மு.க. ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.

இவ்வாறு அவர்கூறினார்.


Next Story