ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்; அனைத்து கட்சியினர் பங்கேற்பு
சட்டமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம்,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
சாத்தான்குளம் தாசில்தார் லட்சுமி கணேஷ், ஏரல் தேர்தல் துணை தாசில்தார் தங்கையா, ஸ்ரீீவைகுண்டம் தேர்தல் துணை தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்களின் நலன்கருதி ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
அப்போது தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலின் போது மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து வாக்காளர்களும் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்க பல்வேறு முன்னேற்பாடுகள் தேர்தல் ஆணைத்தின் உத்தரவின்படி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமம் இன்றி வாக்களிக்க வாகனங்கள் ஏற்பாடு செய்ய சிறப்பு மொபைல் ஆப் மூலம் பதிவு செய்து கொள்ள தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான விழிப்புணர்வு குறுந்தகடு கலெக்டரால் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்டிட அனைத்து கட்சியினரும் தங்களது முழு ஆதரவை தந்திட வேண்டும்’ என்றார்.
கூட்டத்தில், அ.தி.மு.க மாவட்ட அவை தலைவர் திருப்பாற்கடல், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகபெருமாள், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் நல்லகண்ணு, கோதண்டராமன், பா.ஜனதா மாவட்ட செயலாளர் சங்கர் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story