ஜல்லிக்கட்டு


ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 7 Feb 2021 9:12 PM IST (Updated: 7 Feb 2021 9:12 PM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். இதில் மாடு முட்டியதில் வேடிக்கை பார்த்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.


சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியில் ஏழை காத்த அம்மன், வல்லரடிகார சாமி கோவில் உள்ளது. 

இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது.


இதில் மதுரை, திண்டுக்கல், அலங்காநல்லுர், பாலமேடு, சிவகங்கை, விருதுநகர், மேலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜல்லிக்கட்டு காளைகள் களத்தில் இறக்கப்பட்டன. 


6 சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஜல்லிக்கட்டில் 600 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்குவதற்காக 300 வீரர்கள் களமிறங்கினர். 


பரிசோதனை


கால்நடை டாக்டர்கள் மூலம்  காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதற்கான தகுதி சான்று மற்றும் அடையாள அட்டை ஆகியவை சரிபார்க்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது. 

மேலும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை் எடை, உயரம், பார்வை மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்தி உள்ளாரா? என்பது போன்ற பரிசோதனை செய்யப்பட்டது.


ஜல்லிக்கட்டின் போது காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக்குழுவுடன் கூடிய ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு இருந்தது.


சீறிப்பாய்ந்த காளைகள்


ஜல்லிக்கட்டை தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் தொடங்கி வைத்தார் சின்னமனூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன் முன்னிலை வகித்தார். 

வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை.


இதைத்தொடர்ந்து டோக்கன் முறையில் காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. 

அப்போது சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆக்ரோஷத்துடன் அடக்கினர். சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் அவர்களை கொம்பால் தூக்கி வீசி பந்தாடியது. 


ஜல்லிக்கட்டை தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். 

ஜல்லிக்கட்டில் வீரர்களிடம் சிக்காத மாடுகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், அண்டா, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் விழாக்கமிட்டி சார்பில் வழங்கப்பட்டது.

காளை முட்டி பலி

இதனிடையே ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்த சின்னமனூர் ஜக்கம்மாள் கோவில் தெருவை சேர்ந்த  முருகேசன் (வயது 35) என்பவரை காளை ஒன்று முட்டியது. 

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 


இது தவிர காளைகள் முட்டி தூக்கி வீசியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.


ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் 900 போலீசார் செய்து இருந்தனர். 

I

Next Story