பிளாஸ்டிக் பைகளை கடைகளில் பதுக்கி வைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை


பிளாஸ்டிக் பைகளை கடைகளில் பதுக்கி வைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Feb 2021 11:24 PM IST (Updated: 7 Feb 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பைகளை கடைகளில் பதுக்கி வைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகளின் முன்னேற்றம் குறித்து சிறப்பு கண்காணிப்பு குழு கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர், சிறப்பு கண்காணிப்புக்குழு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி கூறியதாவது:-
விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட வீதிகள், பஸ் நிலையங்கள், நகர்ப்புற சாலைகள், கடைவீதிகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் குப்பைகளை, பொது இடங்களில் கொட்டுவதை தவிர்க்கும் பொருட்டு குப்பை தொட்டிகளை அமைத்து குப்பைகளை அன்றாடம் நகராட்சி பணியாளர்களை கொண்டு அகற்ற வேண்டும். நகர்ப்புற கடை உரிமையாளர்களிடம் தேவையற்ற பொருட்களை கடைவீதிகளில் கொட்டுவதை தவிர்த்து குப்பை தொட்டிகளை உபயோகிக்க அறிவுறுத்த வேண்டும்.
 
நடவடிக்கை

பிளாஸ்டிக் பைகளை கடைகளில் பதுக்கி வைத்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குப்பைகளை தெருக்களில் அல்லது கடைவீதிகளில் கொட்டுபவர்கள் மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக சந்தைகளில் கொட்டப்படும் கழிவுகளை இரவு நேரங்களில் சேகரித்து தனி இடங்களை தேர்வு செய்து அவ்விடத்தில் கொட்டப்பட வேண்டும்.  கிராமங்களில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டிகளை சுழற்சி முறையில் தொடர்ந்து சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர், பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
விழிப்புணர்வு வகுப்புகள்
அதேபோல் அரசு, தனியார் பள்ளிகளில் தன்சுத்தம், சுகாதாரம் மற்றும் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுவது குறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். தொடர்ந்து அரிசி ஆலை, தொழிற்சாலைகளை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு விதிகளை மீறி காற்று மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், முதுநிலை நீதிபதி சங்கர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அன்பழகன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஜோதி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பழனிசாமி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story