கலப்பு முறை மருத்துவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில், 7-வது நாளாக பெண் டாக்டர்கள் உண்ணாவிரதம் மோட்டார் சைக்கிள் பேரணியும் நடத்தினர்
கலப்பு முறை மருத்துவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில், 7-வது நாளாக பெண் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள கலப்பு முறை (மிக்சோபதி) மருத்துவ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் கடலூரில் கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இந்த மருத்துவ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
பேரணியை மாநில துணை தலைவர் டாக்டர் கேசவன் தொடங்கி வைத்தார். கடலூர் கிளை தலைவர் பாண்டியன், செயலாளர் முகுந்தன், பொருளாளர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பேரணியில் 20 பேர் கொண்ட டாக்டர்கள் மோட்டார் சைக்கிளில் கலப்பு முறை மருத்துவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதாகை வைத்தபடி நெய்வேலி வரை சென்றடைந்தனர். இந்த குழுவினர் இன்று (திங்கட்கிழமை) நெய்வேலியில் இருந்து விருத்தாசலம் செல்கின்றனர்.
உண்ணாவிரதம்
இதற்கிடையில் கடலூர் அரசு மருத்துவமனை எதிரே பெண் டாக்டர்கள் 7-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். இதில் டாக்டர்கள் சாய்லீலா, ஞானசவுந்தரி, குமுதம் உள்பட ஏராளமான பெண் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் முதுநகர்
இதே கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகில் இந்திய மருத்துவ சங்க கடலூர் கிளை தலைவர் டாக்டர் பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 20-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டு கலப்பு முறை மருத்துவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story