குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Feb 2021 1:57 AM IST (Updated: 8 Feb 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் மலைப்பாதையில் காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாட்டுபட்டி கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 

இந்த கிராமத்தில் கடந்த சில வாரங்களாகவே சரிவர குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் தவித்து வந்தனர். 

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை கொடைக்கானல் மலைப்பாதையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது குடிநீர் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

இந்த சாலை மறியலால் கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து வில்பட்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபோது, மாட்டுபட்டி மற்றும் அட்டுவம்பட்டி பகுதிகளின் குடிநீர் தேவைக்காக ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இன்னும் 3 மாத காலத்தில் பணிகள் முடிக்கப்பட்டு அந்த கிராமங்களில் தினமும் குடிநீர் வினிேயாகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story