துவரங்குறிச்சியில் சிறுமியின் துண்டான விரலை சரி செய்த அரசு மருத்துவமனை


துவரங்குறிச்சியில் சிறுமியின் துண்டான விரலை சரி செய்த அரசு மருத்துவமனை
x
தினத்தந்தி 8 Feb 2021 2:54 AM IST (Updated: 8 Feb 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

துவரங்குறிச்சியில் சிறுமியின் துண்டான விரலை சரி அரசு மருத்துவமனை டாக்டர் சரி செய்து சாதனை படைத்தார்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள தெற்கு எல்லை காட்டுப்பட்டியை சேர்ந்தவர் சங்கீதா. இவரது மகள் சரண்யா (வயது 12). இவர் கரும்பு வெட்டும் போது இடது சுண்டு விரல் முன்பகுதி பாதி நகத்துடன் துண்டானது. துண்டான விரலின் பகுதியை எடுத்து கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று விட்டு பின்னர் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். 
அங்கு டாக்டர் ஜான் விஸ்வநாதன் சிகிச்சை செய்து துண்டான விரலை திரும்பவும் ஓட்ட வைக்க ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார். துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சாதரண எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு கூட அறுவைச் சிகிச்சை கருவிகள் இல்லாத நிலையில் தனது சொந்த எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை கருவிகளை கொண்டு துண்டான விரலை இணைக்கும் இந்த சிக்கலான அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். 
மருத்துவமனையின் செவிலியர் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்போடு அறுவை சிகிச்சை அரங்கை இரவோடு இரவாக தயார் செய்து, வேண்டிய கருவிகளை ஏற்பாடு செய்து சரண்யாவின் துண்டான விரலின் எலும்பை இணைத்து நரம்புகள் சதைகள் அனைத்தையும் தலைமுடியிலும் குறுகிய விட்டம் கொண்ட சிறப்பு நுண் தையல் மூலமாக துண்டான விரலை இணைத்தார். 

இதுபோன்ற சிக்கலான நுணுக்கமான அறுவை சிகிச்சைகள் உருபெருக்கம் செய்து காண்பிக்ககூடிய நவீன மைக்ரோஸ்கோப் கருவி உள்ள தனியார் மருத்துவமனைகளில்தான் செய்ய முடியும். இப்படிபட்ட சவாலான சிக்கலான நுணுக்கமான அறுவை சிகிச்சைகளை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையிலே செய்து சாதித்து காட்டிய ஜான் தலைமையிலான மருத்துவ குழுவிற்கு பொதுமக்களும் அதிகாரிகளும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

Next Story