ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை கோவில் யானைகள் நலவாழ்வு முகாமுக்கு பயணம்


ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை கோவில் யானைகள் நலவாழ்வு முகாமுக்கு பயணம்
x
தினத்தந்தி 8 Feb 2021 3:24 AM IST (Updated: 8 Feb 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை ஆகிய 3 கோவில்களின் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமிற்காக நேற்று தேக்கம்பட்டிக்கு புறப்பட்டு சென்றன.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் கோவில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளின் நலவாழ்வு கருதியும், அவை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அதற்கு புத்துணர்வு அளிப்பதற்காகவும் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கு யானைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இம்முகாமில் யானைகளுக்கு தினமும் காலை, மாலை நடைபயிற்சியும், பசுந்தீவனம், சத்தான உணவு, ஊட்டச்சத்துடன் கூடிய இயற்கை மருந்துகளும் வழங்கப்படும்.

இந்தாண்டிற்கான யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 48 நாட்கள் நடைபெறுகிறது. இந்த முகாமிற்கு திருச்சி மண்டலத்திலிருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி, மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் யானை லட்சுமி, திருவானைக்கோவில் யானை அகிலா ஆகிய 4 யானைகள் லாரிகள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பஞ்சக்கரை சாலையில் உள்ள யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில் இருந்து 4 யானைகளுடன் முகாமிற்கு புறப்பட்ட லாரிகளை இந்துசமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணைஆணையர் சுதர்சன் வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, திருவானைக்கோவில் உதவி ஆணையர் மாரியப்பன், மலைக்கோட்டை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story