மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. நடத்திய சோதனையில் குழாய் அமைத்து காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவு நீர் வெளியேற்றியது கண்டுபிடிப்பு
சாயப்பட்டறைகளில் இருந்து குழாய் அமைத்து காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் வெளியேற்றியது வின் திடீர் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரோடு
சாயப்பட்டறைகளில் இருந்து குழாய் அமைத்து காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் வெளியேற்றியது எம்.எல்.ஏ.வின் திடீர் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ. திடீர் சோதனை
ஈரோடு பகுதியில் செல்லும் காலிங்கராயன் வாய்க்காலில் சாய, சலவை பட்டறைகளின் கழிவுகள் நேரடியாக கலப்பதாக பல ஆண்டுகளாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் பேபி வாய்க்கால் அமைக்கும் பணி நடந்தது. இந்தநிலையில் ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் செல்லும் காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவு நேரடியாக கலந்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து மொடக்குறிச்சி வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. நேற்று அதிகாலை காலிங்கராயன் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டார்.
சாயக்கழிவு
இந்த சோதனையில் சாயப்பட்டறைகளில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் வரை குழாய் அமைத்து சாயக்கழிவுகளை வெளியேற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள குழாயை வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. உடைத்து பார்த்தபோது அதில் இருந்து சாயக்கழிவு வெளியேறியது.
இதுதொடர்பாக ஈரோடு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகளும் நேரில் சென்று சாயக்கழிவுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து எந்த சாயப்பட்டறைகளில் இருந்து கழிவு வெளியேற்றப்படுகிறது? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், காலிங்கராயன் வாய்க்கால் வரை பதிக்கப்பட்ட கழிவுநீர் குழாய் அகற்றப்பட்டது.
சீல் வைப்பு
இது குறித்து வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. கூறியதாவது:-
காலிங்கராயன் வாய்க்காலில் இரவு நேரங்களில் சாயக்கழிவு நீர் வெளியேற்றப்படுவது குறித்து விவசாயிகளிடம் இருந்து புகார்கள் வந்தன. கடந்த ஒரு வாரமாக நான், கட்சியினருடன் இணைந்து சோதனை நடத்தி வருகிறேன். தற்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 4 இடங்களில் சாயக்கழிவுகளை வெளியேற்றுவதற்கான குழாய்கள் அமைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழாய்கள் மூலமாக நேரடியாக வாய்க்காலில் சாயக்கழிவு வெளியேற்றப்பட்டு வந்தது தெரியவந்தது. கடந்த ஒரு வாரத்தில் 9 சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீரை வெளியேற்றும் சாயப்பட்டறைகள் பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு சீல் வைக்க நடவடிக்கை எடுப்பதாக ஈரோடு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story