லால்குடி ஜல்லிக்கட்டில் 531 காளைகள் பங்கேற்பு


லால்குடி ஜல்லிக்கட்டில் 531 காளைகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 Feb 2021 4:12 AM IST (Updated: 8 Feb 2021 4:12 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி ஜல்லிக்கட்டில் 531 காளைகள் பங்கேற்றன. இதில் காளைகள் முட்டியதில் 19 பேர் காயம் அடைந்தனர்.

லால்குடியில் மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டை அ.தி.மு.க. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தொடங்கி வைத்தார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, மதுரை, சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்து 531 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதுபோல் இந்த போட்டியில் 214 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

19 பேர் காயம்
அவர்கள் 50 பேர் கொண்ட குழுவினராக களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டனர். இதில் காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டதும், அவை சீறிப்பாய்ந்து சென்றன. அவற்றை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கமுயன்றனர். இதில் பல காளைகள் வீரர்களிடம் சிக்காமல் சென்று பரிசுகளை தட்டிச்சென்றன. அதுபோல் ஏராளமான காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர். இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 19 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் லால்குடியில் கொடிக்கால் தெரு சசிகுமாருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. கூகூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கத்துக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் லால்குடி நடுத்தெரு சுதாகர் ஜல்லிக்கட்டு கமிட்டி உறுப்பினர் மாட்டை அவிழ்க்கும் போது கத்தி கிழித்து கையில் காயம் ஏற்பட்டது. இவர்கள் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு
முன்னதாக ஜல்லிக்கட்டை முன்னிட்டு பேரூராட்சி சார்பில் முக்கிய இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் காத்தான் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.

Next Story