தீவட்டிப்பட்டி அருகே மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் 3 பேர் கைது


தீவட்டிப்பட்டி அருகே  மாவோயிஸ்டு  ஆதரவாளர்கள்  3 பேர் கைது
x
தினத்தந்தி 8 Feb 2021 4:56 AM IST (Updated: 8 Feb 2021 4:56 AM IST)
t-max-icont-min-icon

தீவட்டிப்பட்டி அருகே மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

 சுட்டுக்கொலை
கேரள மாநிலம் அட்டப்பாடியில் கடந்த 2019-ம் ஆண்டு கேரள போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மாவோயிஸ்டு தீவிரவாத கும்பல் தலைவர் மணிவாசகம் கேரள போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார்.

அப்போது அவரது உடலை சொந்த ஊரான சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி ராமமூர்த்தி நகரில் அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். ஆனால் மணிவாசகம் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து மணிவாசகம் குடும்பத்தினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது சில நிபந்தனைகளுடன் ராமமூர்த்தி நகரில் உடலை அடக்கம் செய்ய கோர்ட்டு அனுமதியளித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15- ந்தேதி உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

6 பேர் கைது
இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வழக்குப் பதிவு செய்து ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த மணிவாசகத்தின் மனைவி கலா (வயது 54), மணிவாசகத்தின் சகோதரி சந்திரா (42), மதுரை மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்த விவேக் என்கிற விவேகானந்தன் (54), ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த லட்சுமி (45), லட்சுமியின் கணவர் சாலிவாகனன் (50), அதே பகுதியை சேர்ந்த சுதாகர் (25) ஆகிய 6 பேர் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இதில் மணிவாசகத்தின் மனைவி கலா உள்பட 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை தீவட்டிப்பட்டி போலீசார் தேடி வந்தனர்.

ஆதரவாளர்கள்
இந்த நிலையில் நேற்று மாவோயிஸ்டு ஆதரவாளர்களான வாழப்பாடி மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்த செல்வராஜ் (55), ஓமலூர் ஆணைகவுண்டம்பட்டியை சேர்ந்த பாலன் (41), சேலம் செல்வநகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (66) ஆகிய 3 பேரையும் ஓமலூர் துணை சூப்பிரண்டு சோமசுந்தரம் மேற்பார்வையில் தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story