லாரி வாடகையை 20 சதவீதம் உயர்த்த சரக்கு போக்குவரத்தாளர்கள் முடிவு
டீசல் விலை உயர்வால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டத்தில் லாரி வாடகையை 20 சதவீதம் உயர்த்துவது என்று சரக்கு போக்குவரத்தாளர்கள் நலச்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மகாசபை கூட்டம்
சேலம் மாவட்ட சரக்கு போக்குவரத்தாளர்கள் நலச்சங்க வருடாந்திர மகாசபை கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. சங்க தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உதவி தலைவர் மகேந்திரன், செயலாளர் ராமநாதன், பொருளாளர் கபிரேல், உப செயலாளர் சிவஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொருளாளரும், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளருமான தனராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
டீசல் விலை உயர்வு
இந்த கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் தங்களது லாரிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ய முடியாமல் மிகவும் சிரமப்பட்டு தொழில் செய்து வருகிறார்கள். எனவே, டீசல் விலையை மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பிரிமியத் தொகையை குறைத்து வசூல் செய்து லாரி உரிமையாளர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். மத்திய அரசு சுங்க கட்டண வசூலை முறைப்படுத்தி லாரி மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்களுக்கு உதவ வேண்டும்.
லாரி வாடகை உயர்வு
கடுமையான டீசல் விலை உயர்வு, டயர் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வு, இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை உயர்வு, சுங்கக்கட்டணம் உயர்வு என பல காரணங்களால் லாரி தொழில் தொடர்ந்து நடத்துவது என்பது மிகவும் கடினமாகவும், கேள்விக்குறியாகவும் உள்ளது. எனவே, சரக்கு போக்குவரத்தாளர்கள் அனைவரும் லாரி வாடகையை 20 சதவீதம் அளவுக்கு உயர்த்தி வாங்க வேண்டும். பிற மாநிலங்களில் வாகனங்களுக்கு காலாண்டு வரிச்சலுகை அளித்துள்ளது போல் தமிழ்நாட்டிலும் காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும்,என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story