சிவகங்கை மாவட்டத்தில் மரபணு மாற்ற பருத்தி விதைகள் விற்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க குழு


சிவகங்கை மாவட்டத்தில் மரபணு மாற்ற பருத்தி விதைகள் விற்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க குழு
x
தினத்தந்தி 8 Feb 2021 12:08 AM GMT (Updated: 8 Feb 2021 12:10 AM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் மரபணு மாற்ற பருத்தி விதைகள் விற்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை,

இது தொடர்பாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் நாச்சியார்அம்மாள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மத்திய அரசின் அனுமதி பெறாத களைக்கொல்லி தாங்கி வளரக் கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரக விதைகள் அரசால் அங்கீகாரம் பெறாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. எனவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரக விதைகள் விற்பனை செய்யபடுகிறதா? என கண்காணிக்க விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புதுறை இயக்குனர் உத்தரவின்படி மாவட்டம் தோறும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தலைமையில் விதை ஆய்வு துணை இயக்குனர், விதைச்சான்று உதவி இயக்குனர்,மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடும் நடவடிக்கை

இதுபோன்று மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரக விதைகளை விற்பனை செய்வது மற்றும் அதை வாங்கி சாகுபடி செய்வது விதைகள் சட்டத்தின் கீழ் விதி மீறல் செயலாகும். 
இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் விதை உற்பத்தியாளர், மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மீது விதைகள் சட்டம் -1966, விதைகள் விதி - 1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை - 1983 ஆகியவற்றின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story