கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கிச்சென்று பணம் திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை
ஜெயங்கொண்டம் அருகே மர்ம நபர்கள், கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கிச்சென்று பணத்தை திருடிச்சென்றனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கடாரங்கொண்டான் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டை மர்மநபர்கள் உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த உண்டியலை திருடியுள்ளனர். பின்னர் அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தைல மரக்காட்டிற்கு அந்த உண்டியலை தூக்கிக்கொண்டு சென்று, அங்கு உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு சில்லரை காசுகளை உண்டியலிலேயே விட்டு விட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரியலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் மலர் வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள், தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
பணம்- மாங்கல்யங்கள் திருட்டு
அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய அம்மனை வேண்டிக்கொண்டு, கோவில் உண்டியலில் மாங்கல்யத்தை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதேபோல் அப்பகுதியில் உள்ள 3 பேர் சமீபத்தில் அரை கிராம், 1 கிராம் என்ற எடையில் மாங்கல்யம் செய்து உண்டியலில் காணிக்கையாக செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமயபுரம் மாரியம்மன், ஆதிபராசக்தி, அய்யப்பன் கோவில் பக்தர்கள் என பலரும் கடந்த 3 மாதமாக உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
இதனால் கோவில் உண்டியலில் சுமார் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருந்திருக்கலாம் என்றும், பணத்தையும், தங்க மாங்கல்யங்களையும் மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். கோவில் கதவை உடைத்து உண்டியலை தூக்கிச்சென்று பணம் உள்ளிட்டவை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story