திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம்


திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 8 Feb 2021 6:40 AM IST (Updated: 8 Feb 2021 6:43 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம்.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டத்திற்கு இன்று தேர்தல் பிரசாரம் செய்ய வரும் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரம்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இதையடுத்து சிவகங்கை மாவட்டத்திற்கு இன்று(திங்கட்கிழமை) வருகை தர உள்ளார். திருப்பத்தூர் அருகே உள்ள வைரவன்பட்டி பகுதியில் சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெறும் இந்த விழாவிற்கு அங்கு பிரமாண்ட முறையில் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நேற்று கட்சியினருடன் பார்வையிட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. கட்சியினரிடம் பல்வேறு அறிவுரை வழங்கினார். 

அப்போது  அவர் கூறியதாவது, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் தங்கள் பகுதியில் இருந்து பொதுமக்களை வாகனங்கள் மூலம் இங்கு அழைத்து வர சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.

வரவேற்பு

அவ்வாறு அழைத்து வந்து அவர்களை மதியம் 1 மணிக்குள் விழா நடைபெறும் அரங்கில் அமர வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். முன்னதாக அவர்களுக்கு இங்கு மதிய உணவு மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை முறையாக கவனித்து அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும். தொடர்ந்து முன்னதாக பொதுமக்களை அழைத்து வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி வைக்க அறிவுறுத்த வேண்டும். தொடர்ந்து விழா நடைபெறும் இடத்திற்கு மாலை 3.30 மணிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிறார். 

அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். தொடர்ந்து அவர் அங்குள்ள பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து விழா மேடைக்கு வரும் அவர் அங்கு பொதுமக்களிடம் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கேட்டு அதற்குரிய மனுக்களை பெற்று மேடையில் உள்ள குறைதீர்க்கும் பெட்டியில் போடுகிறார். மனு கொடுப்பவர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். இதைதொடர்ந்து மு.க.ஸ்டாலின் மாலை 4 மணிக்கு சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story