தனுஷ்கோடி பகுதியில் தடையை மீறி ட்ரோன் கேமராவில் படப்பிடிப்பு


தனுஷ்கோடி பகுதியில் தடையை மீறி ட்ரோன் கேமராவில் படப்பிடிப்பு
x
தினத்தந்தி 8 Feb 2021 6:41 AM IST (Updated: 8 Feb 2021 6:45 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி பகுதியில் தடையை மீறி ட்ரோன் கேமராவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ராமேசுவரம், 

தமிழகத்திலேயே ராமேசுவரம் தனுஷ்கோடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்குகிறது. அதற்கு முக்கிய காரணம் ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் இலங்கை பகுதி உள்ளது தான். பாதுகாப்பு கருதி ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் ஹெலிகேம் மற்றும் ட்ரோன் கேமரா மூலம் படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு காவல்துறையால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதிக்கு நேற்று தமிழக பதிவு எண் கொண்ட கார் ஒன்றில் இரண்டு பேர் வருகை தந்தனர்.அவர்கள் கம்பிபாடு மற்றும் அரிச்சல் முனைக்கு இடைப்பட்ட பகுதியில் ஹெலிகேம் ஒன்றை வானில் பறக்கவிட்டு தனுஷ்கோடி கடல் மற்றும் கடற்கரை சாலை பகுதிகளை சிறிது நேரம் படம் பிடித்தனர். படம் பிடித்து விட்டு மீண்டும் காரில் வேகமாக திரும்பி சென்றனர்.
இவ்வாறு அடிக்கடி தனுஷ்கோடி பகுதியில் வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வானில் பறக்கவிட்டு படம்பிடிக்கும் நிகழ்வு அதிகமாக நடைபெற்று வருகிறது. 

எனவே இதுகுறித்து தனுஷ்கோடி வரும் இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ட்ரோன் மற்றும் ஹெலி கேமராவை வானில்பறக்கவிட்டு படம் பிடிப்பதை முழுமையாக தடுத்து தடை செய்யும் வகையில் தனுஷ்கோடி சாலையில் பல்வேறு இடங்களில் காவல் துறை மூலம் எச்சரிக்கை பலகைகள் வைக்கவேண்டும். தடையை மீறி கேமராவை பறக்கவிட்டு படம்பிடிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story