பொதுத்துறை வங்கியை தனியார்மயமாக்கும் முடிவு தவறானது
பொதுத்துறை வங்கியை தனியார்மயமாக்கும் முடிவு தவறானது என்று ப.சிதம்பரம் கூறினார்.
சிவகங்கை,
காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் சிவகங்கையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன் வரவேற்று பேசினார். கூட்டத்தி்ல் கலந்து கொண்ட முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-
சட்டமன்ற தேர்தல் வரஉள்ளது. இது மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும். கடந்தமுறை சிவகங்கை மற்றும் மானாமதுரை தொகுதிகளை நாம் இழந்து விட்டோம்.
தவறான முடிவு
எனவே அந்த முறை அந்த 2 தொகுதியையும் நாம் கைப்பற்ற வேண்டும். சிவகங்கை, மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் நான் கூடுதலாக பிரசாரம் செய்ய உள்ளேன். சிவகங்கை மற்றும் மானாமதுரை தொகுதியில் நாம் வெற்றி பெற்றால் தான் முழு வெற்றி பெற்றதற்கு அடையாளம். 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. ஆனால் கடந்த 3 மாதமாக தான் பல திட்டங்களை அறிவிக்கின்றனர்.
3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியதை எதிர்த்து விவசாயிகள் போராடுகின்றனர். கடைசியில் விவசாயிகள் தான் வெற்றி பெறுவார்கள். மத்திய அரசின் பொம்மையாக மாநில அரசு உள்ளது. மத்திய அரசின் பட்ஜெட் முதலாளிகளுக்கான பட்ஜெட்டாக உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்ட பொதுத்துறை வங்கியை தனியார்மயமாக்கும் திட்டம் தவறான முடிவாகும். தேவையென்றால் புதிதாக தனியார் வங்கி தொடங்க அனுமதிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம், காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. ராமசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், மாவட்ட செயலாளர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story