6-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலைமறியல்
திருவாரூரில் 6-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 15 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் மற்றும் தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணிபுரியும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அரசுத்துறையில் ஆட்கள் குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தை கடந்த 2-ந்தேதி அரசு ஊழியர் சங்கத்தினர் தொடங்கினர்.
சாலைமறியல்
இந்தநிலையில் நேற்று 6-வது நாளாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்தநிலையில் திருவாரூர் தாலுகா போலீசார் மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 50 பேரை கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story